‏ Ezra 4:8-24

8தளபதியான ரெகூமும், செயலாளராகிய சிம்சாவும் எருசலேமுக்கு எதிராக அரசன் அர்தசஷ்டாவுக்கு எழுதிய கடிதம் இதுவே:

9தளபதியான ரெகூமும், செயலாளராகிய சிம்சாவும் இதை எழுதுகிறோம். எங்கள் கூட்டாளிகளான திரிபோலி, பெர்சியா, ஏரேக், பாபிலோன் ஆகியவற்றைச் சேர்ந்த நீதிபதிகளும் அதிகாரிகளும் சேர்ந்துள்ளார்கள். சூசாவிலுள்ள இவர்கள் ஏலாமியருக்கும் அதிகாரிகளாயிருக்கிறார்கள். 10மற்றும் மேன்மையும், கனமும் உள்ள அஸ்னாப்பார் அரசன் நாடுகடத்திச் சென்று சமாரியப் பட்டணத்திலும், ஐபிராத்து நதியின் மறுகரைவரை குடியமர்த்திய மற்ற மக்களுக்கும் இவர்கள் அதிகாரிகளாய் இருக்கிறார்கள்.

11அவர்கள் அவனுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி இதுவே,

அர்தசஷ்டா அரசனுக்கு,

ஐபிராத்து நதியின் மறுகரையிலுள்ள மனிதர்களான உமது பணியாளர்களாகிய நாங்கள் எழுதுவது,

12உம்மிடத்தில் இருந்து எங்களிடம் வந்த யூதர்கள் எருசலேமுக்குப் போய், கலகமும் கொடுமையும் நிறைந்த அந்தப் பட்டணத்தைத் திரும்பவும் கட்டுகிறார்கள் என்பதை அரசன் அறியவேண்டும். அவர்கள் மதில்களைத் திரும்பவும் கட்டி, அஸ்திபாரங்களைப் பழுதுபார்க்கிறார்கள்.

13பட்டணம் கட்டப்பட்டு, அதில் மதில்களும் திரும்பக் கட்டப்படுமானால் அவர்கள் உமக்குத் தொடர்ந்து வரியோ, திறையோ, சுங்கத் தீர்வையோ செலுத்தமாட்டார்கள். அதனால் அரசருக்குரிய வரிகள் பாதிக்கப்படும் என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறோம். 14இப்பொழுது நாங்கள் அரண்மனைக்கு கடமைப்பட்டவர்களானதினாலும், அரசர் அவமானப்படுவதை நாங்கள் விரும்பாததினாலுமே அரசருக்கு இதை அறிவிக்கும்படி நாங்கள் இச்செய்தியை அறிவிக்கிறோம். 15எனவே, உமது முற்பிதாக்களின் பதிவேட்டுச் சுவடிகள் ஆராயப்பட வேண்டும். அந்தப் பதிவேடுகளில் இருந்து இந்தப் பட்டணம் ஒரு கலகம் விளைவிக்கும் பட்டணம் என்பதையும், முந்திய காலங்களிலிருந்தே அரசருக்கும், மாகாணங்களுக்கும் தொல்லை கொடுக்கும் கலகம் நிறைந்த இடம் என்பதையும் நீர் அறிந்துகொள்வீர். அதனாலேயே இந்தப் பட்டணம் அழிக்கப்பட்டது. 16இப்பொழுது அந்தப் பட்டணம் கட்டப்பட்டு, மதில்களும் திரும்பவும் கட்டிமுடிக்கப்படுமானால், நதியின் மறுகரையில் உமக்கு ஒன்றும் எஞ்சியிருக்காது என்று அரசருக்கு இதை அறிவிக்கிறோம் என எழுதியிருந்தனர்.

17அதற்கு அரசன் அனுப்பிய பதிலாவது:

தளபதி ரெகூமுக்கும், செயலாளராகிய சிம்சாயிக்கும், சமாரியாவிலும் ஐபிராத்து மறுகரையிலுமுள்ள அவர்களின் உடன் அதிகாரிகளுக்கும்

வாழ்த்துச் சொல்லி எழுதுகிறதாவது:

18நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் எனக்கு முன்னால் வாசிக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்பட்டது. 19என் உத்தரவின்படி பதிவேட்டுச் சுவடிகள் தேடிப்பார்க்கப்பட்டன. அதிலிருந்து இப்பட்டணம் அரசருக்கு எதிராக நீண்டகாலமாக கலகம் செய்தது என்பதையும், கலகமும், குழப்பமும் உள்ள இடமாயிருந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. 20அத்துடன் வலிமைமிக்க அரசர்கள் எருசலேமிலிருந்து, நதியின் மறுகரைவரை எங்கும் ஆட்சிசெய்திருக்கின்றனர் எனவும், அவர்களுக்கு வரிகளும், திறையும், சுங்கத் தீர்வையும் செலுத்தப்பட்டிருக்கின்றன எனவும் அறிந்தேன். 21எனவே இப்பொழுதே அந்த வேலையை நிறுத்தும்படி மனிதர்களுக்கு கட்டளை பிறப்பியுங்கள். என்னால் உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை அந்தப் பட்டணம் திருப்பிக் கட்டப்படக்கூடாது. 22இதைச் செய்வதில் கவனக்குறைவாய் இருக்காதீர்கள். ஏன் இந்த அச்சுறுத்தல் வளர்ந்து அரசர்களின் நலன்களுக்குக் கெடுதியை உண்டாக்க வேண்டும் என எழுதியனுப்பினான்.

23அர்தசஷ்டா அரசனின் கடிதத்தின் பிரதி ரெகூமுக்கும், செயலாளராகிய சிம்சாயிக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் வாசித்துக் காட்டப்பட்டது. அவர்கள் உடனடியாக எருசலேமிலுள்ள யூதர்களிடத்தில் போய் வேலையை நிறுத்தும்படி யூதரைப் பலவந்தப்படுத்தினார்கள்.

24எனவே எருசலேமில் இறைவனின் ஆலயவேலை நிறுத்தப்பட்டது. பெர்சிய அரசன் தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் வரைக்கும் இவ்வாறே நிறுத்தப்பட்டிருந்தது.

‏ Ezra 5

ஆளுநர் தத்னாயின் கடிதம்

1அதன்பின் இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகனான இறைவாக்கினன் சகரியாவும், யூதாவிலும் எருசலேமிலும் உள்ள யூதர்களுக்கு தங்களுக்கு மேலாய் இருந்த இஸ்ரயேலரின் இறைவனின் பெயரால் இறைவாக்கு உரைத்தனர். 2அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும் எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத்தொடங்கினர். இறைவனின் இறைவாக்கினர்களும் அவர்களுடனிருந்து அவர்களுக்கு உதவிசெய்தனர்.

3அக்காலத்தில் ஐபிராத்து மறுகரையில் ஆளுநனாய் இருந்த தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களுடைய நண்பர்களும் இவர்களிடம் வந்து, “இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டவும், இந்தக் கட்டிடத்தைத் திரும்பவும் செய்து முடிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டனர். 4அத்துடன், “இதைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்கள் என்ன?” எனவும் கேட்டனர். 5ஆனால் இறைவனின் கண் யூதரின் முதியவர்கள்மேல் இருந்தது. தரியு அரசனுக்கு இதைக்குறித்து அறிவிக்கப்பட்டு அவனிடமிருந்து எழுத்துமூலம் பதில் வரும்வரை அவர்களுடைய வேலை நிறுத்தப்படவில்லை.

6ஐபிராத்து நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தத்னாவும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகளான ஐபிராத்து நதியின் மறுகரையிலுள்ள அதிகாரிகளும் தரியு அரசனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதி இதுவே: 7அவர்கள் அவனுக்கு அனுப்பிய அறிக்கையின் விபரமாவது:

தரியு அரசனுக்கு

மனமார்ந்த வாழ்த்துகள்.

8நாங்கள் யூதா மாவட்டத்திலுள்ள மேன்மையுள்ள இறைவனின் ஆலயத்துக்குப் போனோம் என்பதை அரசன் தெரிந்திருக்க வேண்டும். அந்த மக்கள் அதைப் பெரிய கற்களினால் கட்டி மரத்தாலான உத்திரங்களையும் சுவர்களின்மேல் வைக்கிறார்கள். அந்த வேலை மிகக் கவனத்துடனும், துரிதமாகவும் செய்யப்பட்டு வருகிறது.

9அதனால் நாங்கள் அங்குள்ள முதியவர்களிடம் விசாரித்து அவர்களிடம், “இந்த ஆலயக் கட்டிடத்தை திரும்பக் கட்டவும், இந்தக் கட்டட அமைப்பைப் புதுப்பிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டோம். 10அத்துடன் நாங்கள் உமக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் முதியவர்களின் பெயர்களைக் கேட்டு எழுதினோம்.

11அவர்கள் எங்களுக்குப் பதிலுரைத்து:

“நாங்கள் வானத்துக்கும், பூமிக்கும் இறைவனாய் இருப்பவரின் ஊழியர்கள். பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தையே நாங்கள் திரும்பவும் கட்டிக்கொண்டிருக்கிறோம். அதை இஸ்ரயேலின் ஒரு பெரிய அரசன் கட்டி முடித்திருந்தான்.
12எங்களுடைய முற்பிதாக்கள் பரலோகத்தின் இறைவனுக்குக் கோபமூட்டினதால், அவர் இவர்களை பாபிலோன் அரசனான கல்தேயனாகிய நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்தார். எனவே அவன் இந்த ஆலயத்தை அழித்து மக்களை பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.

13“ஆனாலும் பாபிலோன் அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், இறைவனின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி கோரேஸ் ஒரு கட்டளை பிறப்பித்தான். 14அத்துடன் நேபுகாத்நேச்சார் அரசன் எருசலேமிலுள்ள ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்று, பாபிலோனிலுள்ள கோயிலுக்குள் கொண்டுபோய் வைத்திருந்த தங்கத்தினாலும் வெள்ளியினாலுமான பொருட்களை, கோரேஸ் அரசன் பாபிலோனின் கோயிலிலிருந்து எடுத்தான். பின்பு அவற்றை அரசன் தான் ஆளுநனாக நியமித்திருந்த சேஸ்பாத்சார் என்பவனிடம் கொடுத்தான். 15கோரேஸ் அரசன் அவனிடம், ‘இப்பொருட்களை நீ எருசலேமிலுள்ள ஆலயத்தில் கொண்டுபோய் வை. அவ்விடத்திலேயே இறைவனுடைய ஆலயத்தைத் திரும்பவும் கட்டு’ எனச் சொன்னான்.

16“எனவே சேஸ்பாத்சார் வந்து எருசலேமில் இறைவனின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டான். அந்த நாள் முதல் இன்றுவரை அது கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் இன்னும் முடிவடையவில்லை” என்றார்கள்.

17“ஆகையால் இப்பொழுதும் அரசனுக்கு மனவிருப்பமிருந்தால், பாபிலோனிலுள்ள அரச பதிவேட்டுச் சுவடிகளை ஆராய்ந்து பார்க்கட்டும். எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டும்படி, கோரேஸ் அரசன் உண்மையாக ஒரு கட்டளையை பிறப்பித்தாரோ என்று தேடிப் பார்க்கட்டும். பின்பு அரசன் இந்தக் காரியத்தில் தீர்மானத்தை எங்களுக்கும் அனுப்பட்டும்” என்றார்கள்.

‏ Ezra 6:1-18

தரியு அரசனின் ஆணை

1தரியு அரசனின் உத்தரவின்படி பாபிலோனிலுள்ள களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டுச் சுவடிகளை அவர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். 2மேதியா நாட்டில் அக்மேதா என்னும் அரச அரண்மனையில் ஒரு பிரதி கண்டெடுக்கப்பட்டது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

ஞாபகக் குறிப்பு:

3கோரேஸின் முதலாம் வருட அரசாட்சியில், அரசன் எருசலேமிலுள்ள இறைவனின் ஆலயத்தைக்குறித்துப் பிறப்பித்த கட்டளையாவது:

எருசலேமில் பலிகளைச் செலுத்தும் ஒரு இடமாக ஆலயம் திரும்பக் கட்டப்படட்டும். அதற்கு அஸ்திபாரம் போடப்படட்டும். அதன் உயரம் அறுபது முழமும், அகலம் அறுபது முழமுமாயிருக்க வேண்டும்.
4அது மூன்று வரிசை பெரிய கற்களினாலும், ஒரு வரிசை மரத்தினாலும் கட்டப்பட வேண்டும். அதன் செலவுகளெல்லாம் அரச திரவிய களஞ்சியத்திலிருந்து கொடுக்கப்படவேண்டும். 5அத்துடன் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுவந்த இறைவனின் ஆலயத்துக்குரிய தங்க, வெள்ளிப் பொருட்கள் திரும்பவும் அதற்குரிய இடமான எருசலேம் ஆலயத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அவை இறைவனுடைய ஆலயத்தில் வைக்கப்பட வேண்டும் என எழுதியிருந்தது.

6ஆகவே அரசன் தரியு இந்தச் செய்தியை அனுப்பினான், ஐபிராத்து நதியின் மறுகரையில் ஆளுநராய் இருக்கின்ற தக்னா ஆகிய நீயும், சேத்தார்பொஸ்னாய் ஆகிய நீயும், அந்த மாகாணத்தில் அதிகாரிகளாயிருக்கிற உங்களுடைய நண்பர்களுமான நீங்களும் அங்கிருந்து விலகியிருங்கள். 7இறைவனின் ஆலயத்தில் நடக்கும் இந்த வேலையில் தலையிட வேண்டாம். யூதரின் ஆளுநனும், யூதரின் முதியவர்களும் இறைவனின் ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டட்டும்.

8மேலும் எனது ஆணையாவது: இறைவனுடைய ஆலயத்தின் கட்டட வேலையில் யூதர்களின் முதியவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டியதை நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.

ஐபிராத்து நதிக்கு மறுகரையில் இருந்து பெறப்படுகின்ற வரிப்பணத்தை அரச திரவிய களஞ்சியத்திலிருந்து, இந்த வேலை நின்றுபோகாதபடி முழுவதையும் அந்த மனிதர்களின் செலவுகளுக்குக் கொடுக்கவேண்டும்.
9அத்துடன் எருசலேமில் இருக்கின்ற ஆசாரியர்கள் கேட்கின்றபடி, பரலோகத்தின் இறைவனுக்குத் தகன காணிக்கைகளுக்குத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவை எதுவானாலும் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கப்படவேண்டும். 10அவர்கள் பரலோகத்தின் இறைவனை மகிழ்விக்கும்படி இந்த பலிகளைச் செலுத்தி, அரசனுடைய நலனுக்காகவும், அவனுடைய மகன்களின் நல்வாழ்வுக்காகவும் வேண்டுதல் செய்யும்படி இப்படிச் செய்யவேண்டும்.

11மேலும், இதையும் நான் உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவை யாராவது மாற்றினால், அவனுடைய வீட்டிலிருந்து ஒரு வளை மரம் களற்றப்பட்டு, அவன் அதில் அறையப்பட்டு கொல்லப்படவேண்டும். இந்த குற்றத்திற்காக அவனுடைய வீடு இடிபாடுகளின் குவியலாக ஆக்கப்பட வேண்டும். 12இக்கட்டளையை மாற்றி, எருசலேமில் உள்ள ஆலயத்தை அழிக்கும்படி, தன் கையை உயர்த்துகிற எந்த அரசனையும், மனிதனையும் தனது பெயரை அங்கு நிலைநிறுத்திய இறைவன் கவிழ்த்துப் போடுவாராக.

தரியு ஆகிய நானே இதைக் கட்டளையிட்டிருக்கிறேன். இது கவனத்துடன் செயல்படுத்தப்படட்டும்.

ஆலயம் கட்டி முடிக்கப்படுதல்

13அப்பொழுது ஐபிராத்து மறுகரைக்கு ஆளுநனாக இருந்த தக்னாவும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களோடுகூட இருந்தவர்களும் தரியு அரசனின் உத்தரவின் நிமித்தம் அதைக் கவனத்துடன் செயல்படுத்தினார்கள். 14அப்படியே இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகன் சகரியாவும் உரைத்த இறைவாக்கின் விளைவாக யூதர்களின் முதியவர்கள் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்து வெற்றி பெற்றார்கள். இஸ்ரயேலின் இறைவனின் கட்டளைப்படியும், பெர்சிய அரசர்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டா ஆகியோரின் உத்தரவின்படியும் அவர்கள் ஆலயத்தைக் கட்டிமுடித்தார்கள். 15தரியு அரசனுடைய ஆட்சியின் ஆறாம் வருடத்தில் ஆதார் மாதம் மூன்றாம் நாளில் ஆலயம் கட்டிமுடிந்தது.

16அதன்பின்பு இஸ்ரயேல் மக்களான ஆசாரியரும், லேவியர்களும், மற்றும் நாடுகடத்தப்பட்டவர்களான மீதியானவர்களும் இறைவனின் ஆலயத்தை அர்ப்பணம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். 17இறைவனின் ஆலய அர்ப்பணத்திற்கு அவர்கள் நூறு காளைகள், இருநூறு ஆட்டுக்கடாக்கள், நானூறு ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றைப் பலியாகச் செலுத்தினார்கள். எல்லா இஸ்ரயேலரினதும் பாவநிவாரணக் காணிக்கையாக பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்களைச் செலுத்தினார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒன்றாக அவற்றைச் செலுத்தினார்கள். 18பின்பு மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி எருசலேமிலுள்ள இறைவனின் பணிக்காக ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவின்படியும் லேவியர்களை அவர்களுடைய குழுக்களின்படியும் நியமித்தார்கள்.
Copyright information for TamTCV