Mark 16:9-20
9வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில், மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை அவர் துரத்தியிருந்தார். 10அவள் போய் அவரோடு இருந்தவர்கள் அழுது புலம்பிக்கொண்டிருக்கையில், அதைச் சொன்னாள். 11இயேசு உயிரோடிருக்கிறார் என்றும், அவரை அவள் கண்டாள் என்றும் அவள் சொன்னதை சீடர்கள் நம்பவில்லை. 12இதற்குப் பின்பு இயேசு நாட்டுப்புறமாக நடந்து சென்றுகொண்டிருந்த அவர்களில் இருவருக்குத் தம்மை வேறொரு உருவத்தில் வெளிப்படுத்தினார். 13இவர்கள் திரும்பிப்போய், இதை மற்ற சீடர்களுக்கும் அறிவித்தார்கள்; ஆனால் அவர்களோ இவர்கள் சொன்னதையும் நம்பவில்லை. 14பின்பு சீடர்கள் பதினொருபேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களுக்குக் காட்சியளித்தார்; அவர் சீடர்களுடைய விசுவாசக் குறைவைக் குறித்தும், தாம் உயிர்த்தெழுந்த பின்பு தம்மைக் கண்டவர்கள் சொன்னதைப் பிடிவாதமாய் நம்ப மறுத்ததைக் குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார். 15இயேசு சீடர்களிடம், “நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். 16யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசித்து, திருமுழுக்கு பெறுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் குற்றவாளியாய்த் தீர்க்கப்படுவார்கள். 17விசுவாசிக்கிறவர்கள் மத்தியில், இந்த அடையாளங்கள் காணப்படும்: எனது பெயரில் அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; அவர்கள் புதிய மொழிகளில் பேசுவார்கள்; 18அவர்கள் பாம்புகளைக்கூட தங்கள் கைகளினால் பிடித்துத் தூக்குவார்கள்; சாகவைக்கக் கூடிய நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குக் கேடுவிளைவிக்காது; அவர்கள் நோயாளிகளின்மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள்” என்றார். 19கர்த்தராகிய இயேசு அவர்களுடன் பேசி முடித்தபின்பு, அவர் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். 20அதற்குப் பின்பு, அவருடைய சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். கர்த்தர் அவர்களுடன் செயலாற்றி, தமது வார்த்தையை அற்புத அடையாளங்களினால் உறுதிப்படுத்தினார். ▼
Copyright information for
TamTCV